ராணி இந்தியாவிலிருந்து கிளம்பிய இடம் ‘அயுத்த’ அல்லது ‘ஆயித்த’ என்று கருத்தப்படுகிறது. அதனால், அனேக தற்காலத் தரவுகள் அதை ‘அயோத்தி’ என்றே புரிந்துகொண்டு பதிவு செய்துள்ளன. சமீபத்தில் ராணியைப் போற்றும் வகையில் மத்திய அரசும் தென்கொரியத் தூதரகமும் இணைந்து அயோத்தியில் ராணிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்துள்ளன. இங்குதான் எழுந்திருக்கிறது சர்ச்சை. இளவரசனைத் தேடிச்சென்ற பேரழகி ஒரு தமிழச்சி என்ற ஆதாரங்களையும் வராலாற்றுத் தரவுகளையும் முன்வைக்கிறது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் தமிழ் மடலாடும் குழுமம். அதன் தலைவரான மலேசியாவைச் சேர்ந்த முனைவர் கண்ணன், பேராசிரியர் நாகராஜன், தமிழகத்தின் கடலியல் ஆய்வாளரான, ‘ஒரிசா பாலு’ என அழைக்கப்படும் பாலசுப்பிரமணி ஆகியோர் இதுகுறித்துக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆய்வு செய்துவருகின்றனர்.